வரப்போகும் இன்னல்களுக்கு, திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே பொறுப்புக் கூற வேண்டும்
தமிழ் மக்களுக்கு பயன்தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப்போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 22 ஆம் திருத்தம் ஒட்டுமொத்த நாட்டுக்கானது அல்லது அத்துடன் தேசியத்துக்கான திருத்தமும் அல்ல மேற்கு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவும், சிங்கள மக்களின் மனங்களை வெல்லவும் மட்டுமே இவ்வாறு திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சிங்கள மக்களின் ஜனநாயகம் மட்டுமே இங்கே கவனிக்கப்பட்டது. ஏனைய இனங்களின் நலன், தேசியம் இங்கு கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளப்படவில்லை.
அத்துடன் ராஜபக்சாக்கள் இதன் மூலம் தனிமைப்படுத்துவதும் இதன் நோக்கமாக காணப்பட்டது. அவை ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே தான்,தமிழ் மக்களின் நிலைகளை அவர்களே தீர்மானம் எடுத்து ஆட்சி செய்ய வேண்டும், அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏதேனும் ஒரு பகுதியாவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ்த் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்குவது பொருத்தமானது என்று முன்னர் குறிப்பிட்டதையும் நினைவுகூர்ந்தார்.