கோவை கார் வெடிப்பு- விசாரணை நிறைவு.!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின.

இதனை அடுத்து போலீசார் விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்க்குள் உள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் விசாரணையில் சந்தேகப்படும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

அதன்படி, நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சாஹிப் முகமது அலி (வயது 35), சையது முகமது புகாரி(வயது 36), முகமது அலி (வயது 38), முகமது இப்ராஹிம் (வயது 37) ஆகிய நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இன்று காலை 7:30 மணிக்கு ஆரம்பித்த இச்சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற சோதனையில் 9 ஆண்டிராய்டு செல்போன்களும், 4 சாதாரண போன்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.