நோர்வே படைகளின் ஆயத்த நிலை அதிகரிப்பு!

Kumarathasan Karthigesu

லண்டனுக்கான எரிவாயு குழாய்கள் மீது ரஷ்யா குறி வைக்கும் என அச்சம்.

உக்ரைன் போரினால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் நோர்வே அதன் பாதுகாப்புப் படைகளின் ஆயத்த நிலையை (readiness) மேலும் அதிகரித்திருக்கிறது.

நேட்டோ அணியுடன் இணைந்து கடலிலும் தரையிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலைகளைப் பாதுகாப்பதற்கான ரோந்துப் பணிகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு படைகளின் ஆயத்த நிலை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படுவதாக பிரதமர் ஜோனாஸ் ஹார் ஸ்டோர் (Jonas Gahr Støre) தெரிவித்திருக்கிறார்

ரஷ்யா அதன் போரை அண்டை நாடுகளுக்கு விஸ்தரிக்கும் அறிகுறிகள் தென்படாவிடினும் அதிகரித்துவரும் பதற்றம் அச்சுறுத்தல், உளவு, தலையீடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா அதன் இயற்கை எரிவாயுவை நிறுத்தியதை அடுத்து நோர்வே ஐரோப்பாவின் பிரதான எரிவாயு விநியோக நாடாக மாறியுள்ளது. அதனால் அதன் எரிவாயு மையங்கள் ரஷ்யாவின் நாச வேலைகளுக்கு இலக்காகலாம் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன. அதை நிரூபிப்பது போன்ற பல சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அங்கு அவதானிக்கப்பட்டுள்ளன. நோர்வேயின் எண்ணெய், எரிவாயு நிலைகளுக்கு மேல் ட்ரோன்களைப் பறக்க விட்ட ரஷ்யப் பிரஜைகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதை விட ரஷ்ய உளவாளியான பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவரை நோர்வே ரகசிய சேவையினர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்திருக்கின்றனர். பிறேசில் நாட்டவர் என்ற அடையாள ஆவணங்களுடன் ஒஸ்லோவில் தங்கியிருந்த பிரஸ்தாப பல்கலைக்கழக விரிவுரையாளர் ரஷ்யாவுக்காக உளவுத் தகவல்களைச் சேகரித்து வந்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

பால்டிக் கடலில் அண்மையில் நோட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் ஆழ் கடல் ஊடான நோர்வேயின் எரிவாயுக் குழாய்களின் பாதுகாப்புத் தொடர்பான அச்சங்கள் ஏற்படுத்தி உள்ளது. நோட் ஸ்ட்ரீம் குழாய்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் பிரிட்டிஷ் ரோயல் கடற்படைக்குத் தொடர்பு இருப்பதாக மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது. அது லண்டனுக்கும் கிரெம்ளினுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

பிரிட்டிஷ் மக்களைக் கடும் குளிரில் சிக்க வைக்கின்ற நோக்குடன் நோர்வேயில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கின்ற குழாய்களை ரஷ்யா நாச வேலை மூலம் துண்டிக்கக் கூடும் என்று நேட்டோ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தின் எரிவாயுத் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை நோர்வே அதன் வட கடலடிக் குழாய் மூலம் வழங்கி வருகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">