டென்மார்க் தேர்தல்: புதிய கட்சிகளே அடுத்த பிரதமரை தீர்மானிக்கும்?

Kumarathasan Karthigesu

மிங் விலங்கு விவகாரத்தால்  நாடு சந்திக்கும் வாக்களிப்பு இம்முறை குடியேறிகளை விட வாழ்க்கைச் செலவுச் சிக்கலே வாக்காளர்களிடம் செல்வாக்கு

ஸ்கன்டிநேவியன் நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் நவம்பர் முதல் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 179 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு (Folketinget) உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குப் பாரம்பரியமாகப் பத்துக் கட்சிகள் போட்டியிடுவது வழக்கம். இம்முறை 14 கட்சிகள் களமிறங்கியுள்ளன.

அடுத்து அரசமைக்கப்போகின்ற அணியையும் பிரதமரையும் தீர்மானிப்பதில் புதிய கட்சிகளே செல்வாக்குச் செலுத்தும் என்று அரசியல் அவதானிகள் மதிப்பிடுகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு 17 மில்லியன் மிங் விலங்குகளைக் கொல்வதற்கு எடுத்த தீர்மானத்தின் விளைவாக எழுந்த அரசியல் நெருக்கடிகளை அடுத்தே டென்மார்க் பிரதமர் மெற்ற ஃபிரெடெரிக்ஸன் முன் கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அழைப்பை விடுத்திருந்தார். பண்ணைகளில் கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற அச்சம் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த மிங் விலங்குகளையும் அழித்துவிட அவர் எடுத்த முடிவு சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி எதிர்க் கட்சிகள் அவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருந்தன. மிங் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கை, ஃபிரெடெரிக்ஸன் அம்மையாரின் சிறுபான்மைக் கூட்டணி ஆட்சிக்குள் புயலைக் கிளப்பியிருந்தது.

நாளைய (நவ. 1) வாக்கெடுப்பில் வலது, இடது சார்பு அணிகள் இரண்டுக்குமே பெரும்பான்மையை நிரூபிக்கின்ற 90 ஆசனங்கள் கிடைக்கப் போவதில்லை என்பதைக் கணிப்புகள் காட்டுகின்றன. ஃபிரெடெரிக்ஸன் அம்மையாரின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான இடது சார்பு சிவப்பு அணி (“red bloc”) 49.1 சதவீத வாக்குகளுடன் 85 ஆசனங்களையும் வலது சாரிக் கட்சிகளை உள்ளடக்கிய  நீல அணி(“blue bloc”) 40.9 வீத வாக்குகளுடன் 72 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கிங் மேக்கராக முன்னாள் பிரதமர் லார்ஸ் லொக்கே ராஸ்முசெனின் (Lars Lokke Rasmussen) தலைமையிலான மிதவாதிகள் (Moderates) அணி முக்கிய இடத்தில் உள்ளது. அவரது அணி வாக்குகளில் பத்து வீதத்தை அல்லது 18 ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்று கணிக்கப்படுகிறது.

குடியேறிகளுக்கு எதிரான வலது சார்பு தேசியவாதிகளும் இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஆனால் நாட்டின் தேசியவாதிகள் மூன்று கட்சிகளாக அணி பிரிந்துள்ளனர். அதேசமயம் இம் முறை டெனிஷ் வாக்காளர்களது மனங்களில் குடியேறிகள் விவகாரத்தை விடவும் உக்ரைன் போர் ஏற்படுத்திய பண வீக்கம், விலைவாசி உயர்வு, எரிசக்தி நெருக்கடி போன்ற நாளாந்த வாழ்வைப் பாதிக்கின்ற விவகாரங்களே முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன. அது வாக்களிப்பில் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.