ராஜபக்ச பதவிக்கலத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளை பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்க முடியாவில்லை : இலங்கை அரசாங்கம் ஏற்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில், இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளை பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்க முடியாமல் போன விடயத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் பெரியளவில் தெளிவுபடுத்தல்கள் மற்றும் முயற்சிகளை முன்னெடுத்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் சுமார் 900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய கோட்டா அரசாங்கத்திலும் அமைச்சராக செயற்பட்டவரும், தற்போதைய அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான  பந்துல குணவர்தன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கடந்த ஒரு வருடம் மற்றும் ஒன்பது மாதங்களில் இடம்பெற்ற குறித்த கொலைகளுக்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தவில்லை. இதேவேளை, கடந்த காலத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பலர் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த படுகொலையின் பின்னராக உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டம், நடவடிக்கைமுறை மற்றும் பிரயோகங்கள் தொடர்பாகப் பொருத்தமான திருத்தங்களை அடையாளங்கண்டு, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான  பந்துல குணவர்தன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.