இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களைக் கண்டுபிடிக்க அரசிடம் எந்த வழியும் இல்லை.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை  குடியுரிமை பிரஜைகளை அடையாளம் காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை நடவடிக்கை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“அதனை  கண்டறிய அரசாங்கத்திடம் வழியில்லை. அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நீதிமன்றம் மூலம் தேடினாலே ஒழிய, அரசாங்கம் அதனை தேடி கண்டுபிடிப்பதற்கு வழி இருப்பதாக என்னுடைய அறிவுக்கு எட்டியவரை கருதவில்லை. எனவே இது நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என முன்னாள் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார். “
ஒக்டோபர் 26ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அரசாங்கம் அந்த பெயர்களை வெளியிடுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஒக்டோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்கு நாட்டின் சட்ட மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.