வான் வெளியில் மர்ம நிகழ்வுகளை ஆராய சுயாதீனக்குழு நாசா நிறுவியது!
Kumarathasan Karthigesu
வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டுகள் பற்றி விசாரணை அறிக்கை.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்(unidentified flying object – UFO)தொடர்பில் வெளியாகி வருகின்ற தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளது.
பிரபல நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் ஸ்கொட் கெல்லி (Scott Kelly) உட்பட உலகின் முன்னணி அறிவியலாளர்கள், விண்வெளிப் பாதுகாப்பு நிபுணர்கள், தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுவிற்பனர்கள் 16 பேர் கொண்ட அந்த நிபுணர்கள் குழு அதன் பணிகளை ஒக்ரோபர் 24 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. ஒன்பது மாதகால ஆய்வின் முடிவில் அடுத்த ஆண்டு அதன் அறிக்கை வெளியிடப்படும்.
வானில் அடையாளம் தெரியாத பறக்கும் ஊர்திகளையும் ஒளிரும் பொருள்களையும் கண்டதாகக் கூறப்படும் பல்வேறு கதைகள் மிக நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் அவை ஒருபோதும் அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு என்ன என்பது நிரூபிக்கப்படவில்லை.
பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதைகள் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக மனித குலத்தினால் அவிழ்க்கப்படாத முடியாத மர்ம முடிச்சுகளாக இருந்த வருகின்றன. அண்மைக் காலங்களில் விமானிகளும் ஆழ் கடலில் செல்லும் கடற்படைக் கப்பல்களின் மாலுமிகளும் புதிதாகப் பல மர்ம நிகழ்வுகளை வானில் அவதானித்திருக்கின்றனர். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பசுபிக் கடல் பரப்பிலும் வானில் பறக்கும் பொருள்கள் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான செய்திகளும் படங்களும் அடிக்கடி வெளிவந்துள்ளன.
அவை போன்ற பறக்கும் மர்மப் பொருள்களை அமெரிக்கா“அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள்” (“unidentified aerial phenomena” UAP) என்று பெயரிட்டு அழைக்கின்றது. அமெரிக்க இராணுவப் பார்வையாளர்களால் 2004 ஆம் ஆண்டு முதல் அவதானிக்கப்பட்டுவந்த இவை போன்ற 140 வான் வெளி நிகழ்வுகள் அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்கான போதிய தரவுகளைக் கொண்டிருக்கவில்லை என்று பென்ரகன் தெரிவித்திருந்தது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அமெரிக்கக் காங்கிரஸ் முன்னிலையில் தோன்றி அடையாளம் தெரியாத சுமார் 400 வான்வெளி நிகழ்வுகள் பற்றி விளக்கமளித்திருந்தனர். ஆனால் அவை எல்லாமே மனித அறிவியல் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையிலேயே நாசாவின் உதவியுடன் நிபுணர்கள் குழு ஒன்று அவை பற்றிய தரவுகளைச் சேகரித்து ஆராய்ந்து ஒரு பூர்வாங்க முடிவை எடுக்கவுள்ளது.
வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டுகள் பற்றிய கற்பனைக் கதைகள் பல தசாப்தங்களாக நீடித்து நிலவி வருகின்ற போதிலும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் எதுவும் பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாசா இது வரை மறுத்தே வந்துள்ளது.