முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்.
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.அப்பொழுது தங்க கவசமானது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.அதன் பின்னர் மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இதற்கிடையில் அதிமுகவில் எழுந்த ஒற்றைத்தலைமை பிரச்சனையால், தங்க கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உரிமை கோரினர்.இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தங்க கவசத்தை வழங்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பினரையும் இந்த வழக்கத்தில் மனுதாரராக இணைக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தங்கக்கவச உரிமையை இபிஎஸ் அல்லது ஒபிஎஸ் தரப்பிற்கு செல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் வருவாய் கொட்டாச்சியரிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்கப்படுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது..
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேவர் தங்க கவசத்தை வங்கியில் இருந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெற்று, கவசந்தை அணிவித்து விட்டு மீண்டும் அதனை பெற்று வங்கியில் ஒப்படைக்குமாறும், இதற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு இந்தாண்டு மட்டுமே செல்லுபடியாகும் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.