சிறுமி லோலாவின் இறுதி நிகழ்வில் உள்துறை அமைச்சர்.
Kumarathasan Karthigesu.
வெளிநாட்டினருக்கு எதிராக லியோனில் பேரணி முஸ்தீபு
பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி லோலாவின் இறுதி நிகழ்வுகளும் உடல் அடக்கமும் அவளது பெற்றோர்களது சொந்த இடமாகிய பா-து-கலேயில் (Pas-de-Calais) நேற்று திங்கட்கிழமை நடைபெற்றன. குடும்பத்தினரது அழைப்பின் பேரில் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்.
பா-து-கலேயில் உள்ள Lilles என்ற இடத்தில் சிறிய தேவாலயம் ஒன்றில் நடந்த இறுதி ஆராதனையில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு லோலாவுக்கு மரியாதை செலுத்தினர்.
சிறுமி லோலாவைச் சித்திரவதைக் குள்ளாக்கிப் படுகொலை செய்து பயணப் பெட்டி ஒன்றினுள் மறைத்த பாதகச் செயலைப் புரிந்த அல்ஜீரிய நாட்டு யுவதி, நாடு கடத்தல் உத்தரவின் கீழ் நாட்டில் தங்கியிருந்தவர் என்பது தெரியவந்ததால் அந்தக் கொலை பிரான்ஸின் தேசிய அரசியலில் அதிர்வுகளையும் விவாதங்களையும் கிளப்பியிருந்தது.
குடியேறிகள், மற்றும் அவர்களை நாடுகடத்துதல் தொடர்பான மக்ரோன் அரசினது கொள்கைகளில் உள்ள மிகப் பெரிய பலவீனமே சிறுமியின் உயிரைப் பலியெடுத்து விட்டது என்று குற்றம் சுமத்தி, இந்த விவகாரத்தைப் பெரும் அரசியலாக்குவதற்குத் தீவிர வலது சாரிகள் முயற்சித்தனர். நாடாளுமன்றத்தில் சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. பிரதமர் எலிசபெத் போர்னும் அதிபர் மக்ரோனும் தலையிட்டு கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு நிலைவரம் முற்றியது.
தங்களது பிள்ளையின் பெயரில் அரசியல் செய்யாதீர்கள் என்று லோலாவின் பெற்றோர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். தீவிர வலதுசாரித் தலைவர் எரிக் செமூரின் ஆதரவாளர்கள் பாரிஸிலும் நாட்டின் சில பகுதிகளிலும் சிறுமி கொலையைக் கண்டித்துப் பேரணிகளை நடத்தினர்.
அவற்றில் சிறுமி லோலாவின் படங்கள் பயன்படுத்தப்பட்டதைக் குடும்பத்தினர் ஆட்சேபித்திருந்தனர்.”எங்களது பிள்ளையின் படத்தையோ பெயரையோ பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலவேண்டாம். எங்கள் துயரத்துக்கு மதிப்பளியுங்கள்”என்று அவர்கள் சார்பில் பொதுவான வேண்டுகோள் ஒன்றைச் சட்டத்தரணி ஊடாக வெளியிட்டனர்.
இதேவேளை, லியோன் (Lyon) பகுதியில் சிறுமி லோலாவின் படுகொலையைப் பயன்படுத்தி வெளிநாட்டினருக்கு எதிராகக் – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக – இணையம் ஊடாக அழைப்பு விடுத்துப் பேரணி ஒன்றை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பொலீஸார் தடுத்துள்ளனர். அது தொடர்பாக அரச சட்டவாளர் அலுவலகம் விசாரணை ஒன்றைத் தொடக்கியுள்ளது.
இதற்கிடையில் – கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்ஜீரிய யுவதி, 2019 இல் பாரிஸில் மருத்துவச் சிகிச்சை நிலையம் ஒன்றில் இரு பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களைத் தாக்கப் போவதாக மிரட்டினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு ஆதாரமான வீடியோப் பதிவு ஒன்று கிடைத்திருப்பதாக பிரான்ஸின் செய்தித் தொலைக்காட்சிச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.