“தவறுகளை சரி செய்வதற்காக நான் நியமிக்கப்பட்டேன்” – இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை, ‘இது இங்கிலாந்துக்கு ஒரு புதிய விடியல்’ என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமராக அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போது நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ரஷிய அதிபர் புதின் தொடுத்துள்ள உக்ரைன் போர், உலகம் முழுவதும் சந்தைகளை சீர்குலைத்துள்ளது. நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய, முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்  வேலை செய்ய தவறவில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.

ஆனால் சில தவறுகள் நடந்தன. நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதை செய்ய நாள்தோறும் உழைப்பேன். நம்பிக்கை எனக்கு கிடைத்தது, இன்னும் நம்பிக்கையை சம்பாதிப்பேன். நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் சொந்தமானது, நம்பிக்கை தான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து, புதன்கிழமை(நாளை) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் “பிரதமரின் கேள்விகள்” நிகழ்ச்சியில் ரிஷி சுனக் உரையாற்ற உள்ளார்.