சூப்பர் 12 சுற்று: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி.

ஹோபர்ட்டில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்தித்தது .

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகிய பிரதான வீரர்கள் இருவர் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஆரமப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு இருந்த நெருக்கடியை நீக்கினார்.

நிஸ்ஸன்கவுக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அப்போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று சுப்பர் 12 சுற்றில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

25 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்;து இலங்கை வெற்றி அடைவதை உறுதி செய்தனர்.

குசல் மெண்டிஸ் 43 பந்தகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் 22 பந்துகளை எதிர்கொண்ட சரித் அசலன்க 2 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 31 ஒட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மமானித்தஅயர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் 6 பேரும் மிகத் திறமையாக பந்துவீசி குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அயர்லாந்தை கட்டுப்படுத்தினர்.

சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங், இளம் வீரர் ஹெரி டக்டர் ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

லஹிரு குமாரவின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை 2ஆவது ஓவரில்  இழந்த அயர்லாந்து, வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு கடும் பிரயத்தனம் எடுத்தது.

ஹெரி டெக்டர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் டொக்ரெலின் ஆட்டமிழப்புடன் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் சரிந்ததால் அயர்லாந்தினால் பலமான நிலையை அடைய முடியவில்லை.

துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 45 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 34 ஓட்டங்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 14 ஓட்டங்களையும் லோர்க்கன் டக்கர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா ஆகியொர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.