ரிஷி சுனாக்- பொறிஸ் ஜோன்சன்- பென்னி மோர்டான்ட் மும்முனைப் போட்டி? அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
Kumarathasan Karthigesu
பிரிட்டிஷ் பழமைவாதக் கட்சி மிகக்குறுகிய காலத்தில் – ஓரிரு மாதகால இடைவெளிக்குள்-மீண்டும் தலைமைத்துவத்துக்கான போட்டியை எதிர்கொள்கிறது.
பதவிக்கு வந்து 45 நாட்களில் பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) அம்மையார் பெரும் இக் கட்டில் சிக்குண்டு மீள வழியின்றிப் பதவி விலகிச் சென்றிருப்பது நாட்டை மீண்டும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. மக்கள் பெரும் விசனமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த ஒருவார காலத்துக்குள் பல திடீர் திருப்பங்கள் நிகழவிருக்கின்றன.
பொதுத் தேர்தலைத் தவிர்த்துவிட்டு ஆட்சியைக் கொண்டுநடத்த விரும்புகின்ற பழமைவாதக் கட்சி, மீண்டும் அவசர அவசரமாக ஒரு தலைவரைத் தெரிவுசெய்ய ஆயத்தமாகிறது. ஒரு வார காலத்தில் புதிய தலைவர் தெரிவுக்கான நடைமுறைகள் மிக வேகமாக இடம்பெறவுள்ளன. அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கான பந்தயத்தில் தற்போதைய குழப்பங்களுக்கு எல்லாம் வழி சமைத்த முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் நுழைகிறார் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவரோடு முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்
இரண்டாவது முக்கிய போட்டியாளராக உள்ளார். இந்திய வம்சாவளிப் பின்னணி கொண்டவராகிய ரிஷி சுனாக் கடைசியாக நடந்த தலைமைத்துவத் தேர்தலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருந்தவர். கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர். அவர் கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிவாகி நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் மிகப் பிரகாசமாகக் காணப்படுகிறன.
ஆனால் அவர் தனது அரசியல் குருவும் சகாவுமாகிய பொறிஸ் ஜோன்சனுடன் நேரடியாக மோத விரும்புவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பொறிஸ் ஜோன்சன் தற்சமயம் கரீபியன் தீவுகளில் விடுமுறையில் தங்கியுள்ளார். அவர் கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் மீண்டும் களம் இறங்குவார் என்று ரைம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது மீள் வரவை வாழ்த்தி ஆதரவாளர்கள் செய்திகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
ஊழல் குற்றச் சாட்டுகளால் பதவி விலகிக் குறுகிய காலத்துக்குள் அவரை மீண்டும் டவுணிங் வீதி அலுவலகத்துக்குள் நுழையக் கட்சியினர் அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. ஆயினும் அவர் மீண்டும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவதில் எந்த வித சட்டச் சிக்கல்களும் கிடையாது.
இவர்கள் இருவருடன் மூன்றாவது முக்கிய போட்டியாளராக மற்றொரு உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) விளங்குகிறார். லிஸ் ட்ரஸின் இடத்துக்குப் போட்டியிடப் போகும் தனது விருப்பத்தை அவர் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். ரிஷி சுனாக், பொறிஸ் ஜோன்சன் இருவரும் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை முறைப்படி அறிவிக்கவில்லை.
கட்சித் தலைமைக்கான போட்டிக்குள் நுழைய விரும்பும் எவருமே எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகலுக்கு முன்பாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது நூறு பேரது ஆதரவைத் திரட்ட வேண்டியது கட்டாயம் ஆகும்.