சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி மற்றுமோர் பிரித்தானிய நிழல் அமைச்சருடன் சந்திப்பு!

நிழல் அமைச்சர் ஜோனாதன் அஸ்வோத் எம்.பி் தனது ஆதரவை வழங்க உத்தரவாதம் .

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யக்கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நோக்கில் பிரித்தானியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் தொடர் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவது அறிந்ததே. அந்த வகையில் பிரித்தானியாவின் தொழில் மற்றும் ஓய்வூதியத்துக்கான நிழல் அமைச்சரும் (Shadow Minister for Work and Pension), லேஸ்டர் தெற்கு (Leicester South) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான, அதி மதிப்பிற்குரிய ஜோன் அஸ்வோத் எம்.பி (Rt. Hon. Jonathan Michael Graham Ashworth MP) அவர்களுடன் மேற்படி சந்திப்பு வெள்ளியன்று (21/10/2022) மதியம் 12.40 pm மணியளவில் மெய்நிகர்வழி (Teams) ஊடாக இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் சித்திரவதையில் தப்பிவந்தவரான றொசான் கான் சவூல் கமீட் சார்பில் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், இனப்படுகொலையை தண்டிப்பதற்கும் தடுப்பதற்குமான சர்வதேச சட்ட மையத்தின் (ICPPG) ஏற்பாட்டில் இந்த சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், ICPPG யின் பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார் மற்றும் The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார பணிப்பாளர் குமார் மோரிஸ் (Ben Kumar Morris), தொழில்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) தலைவர் திரு. சென். கந்தையா ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு, இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய வேண்டிய அவசியத்தினையும், அவரின் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் சவேந்திர சில்வாவின் தடை நடவடிக்கை தாமதிப்பது ஏன் என FCDO இனை வினவுமாறும் இத் தடைக் கோரிக்கைக்கு மேல்முறையீடு (Appeal) கோரி விண்ணப்பிக்க முடியுமா என்பதையும் தெளிவுபடுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவினை தெரிவித்ததுடன் சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேற்படி சந்திப்பில் இலங்கையில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான நிலக்ஐன் சிவலிங்கம், துவாரகன் செல்வரத்தினம் ,கபிலன் அன்புரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரிந்தானியா தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் பணியை கீத் குலசேகரம் தலமையிலான ICPPG யின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.