பாரிஸ் ஒலிம்பிக் : தொண்டர்களாக பணிபுரிய 45 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு.

Kumarathasan Karthigesu

உணவு, ஊதியத்துடன் வேலை ,விண்ணப்ப விவரம் அறிவிப்பு.

பாரிஸில் 2024 கோடையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்வேறு நிலைகளில் இணைந்து பணியாற்றுவதற்காக 45 ஆயிரம் தொண்டர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர்.

பெரு விளையாட்டு விழா சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொண்டர்களைச் சேவைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரவேற்புப் பகுதி, விளையாட்டு வீரர்கள், குழுக்களுக்கான உதவி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் அதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு உதவுதல், நேர முகாமைத்துவம் மற்றும் தரவுகளைச் சேமித்தல் போன்ற பணிகளுக்கு உதவுதல், மருத்துவ, முதலுதவிப் பணியாளர்களுக்கு உதவுதல் உட்படப் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளோர் தொண்டர்களாக இணைந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

வாராந்தம் ஆறு நாட்கள் சம்பளம், உணவு மற்றும் இலவச போக்குவரத்து வசதியுடன் எட்டு மணிநேர வேலை வழங்கப்படும். பிரெஞ்சு, ஆங்கிலம் இரு மொழிகளிலும் பேசக் கூடிய – 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பதாரர்கள் 2024 ஜனவரி 1 ஆம் திகதி 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொள்ளப்படும். தெரிவு செய்யப்படுவோர் 2024 ஜூலையில் போட்டிகள் ஆரம்பமாகுவதற்குப் 10 தினங்கள் முன்பாக அதற்காக நிறுவப்படும் ஒலிமபிக் கிராமங்களில் சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாகும்.இது தொடர்பான மேலதிக விவரங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வெளியாகியுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் வாழ்க்கையில் ஒரு தடவையே கிடைக்கக் கூடியதுமான ஒலிம்பிக் விழாவில் தொண்டர்களாக இணைந்து கொள்ளும் இந்தச் சந்தர்ப்பம் இல்-து-பிரான்ஸின் இளையோருக்கு ஒரு நல்வாய்ப்பாகும்.