கீவ் நகரம் மீது “தற்கொலை” ட்ரோன் குண்டுத் தாக்குதல்!!
Kumarathasan Karthigesu
உக்ரைன் தலைநகரில் பல இடங்கள் மீது ரஷ்யா திங்கட்கிழமை காலை ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது அவை ஈரானியத் தயாரிப்பு வகைகளைச் சேர்ந்த “கமிஹாஸி” எனப்படும் தற்கொலை ட்ரோன்கள் (“kamikaze” drones) என்று உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
உக்ரைன் போரில் இரண்டு தரப்புகளுமே ட்ரோன்களைப் பயன்படுத்தி எதிரி நிலைகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றன. ஆனால் தலைநகரில் அதிகம் மக்கள் நெருக்கமாக வதியும் இடங்களில் அவ்வாறு ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
ஒரே சமயத்தில் நாலாபுறமும் இருந்து பறந்துவந்த ட்ரோன்கள் பல இடங்களிலும் தாக்கி வெடித்துப் பெரும் பீதியைக் கிளப்பின என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நகரின் மேல் பறக்கும் ட்ரோன்களை நோக்கிப் பொலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. பல இடங்களில் குடியிருப்புக் கட்டடங்கள் போன்ற சிவிலியன் இலக்குகள் மீதும் ட்ரோன்கள் மோதி வெடித்துள்ளன.
மின் நிலையங்கள் போன்ற உட் கட்டமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளன. அதனால் மின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டன. தலைநகருக்கு சுழற்சி முறையிலேயே மின் விநியோகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் முனைகளில் முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலையில் மொஸ்கோ சமீப நாட்களாக உக்ரைனில் சிவிலியன் இலக்குகளைத் தாக்குகின்ற புதிய உத்தியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது என்று அவதானிகள் கூறுகின்றனர். தலைநகர் போன்ற இடங்களில் சிவிலியன்கள் மீது தாக்கி உக்ரைன் மக்களின் மனத் திடத்தை உடைப்பது அதன் நோக்கம் என்று போரியல் வல்லுநர் ஒருவர் குறிப்பிடுகிறார். கீவ் புற நகரில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றை ட்ரோன் தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதனை ஒரு “போர்க் குற்றம்” என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது.
ஈரான் ட்ரோன்கள் உட்படப் போராயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கி வருகிறது என்று உக்ரைனும் மேற்கு நாடுகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. ஆனால் தெஹ்ரான் அதை மறுத்து வருகிறது. ஈரானின் “ஷாஹத்-136″(Shahed-136) என்ற நவீன ட்ரோன்கள் வான் பாதுகாப்பு ரடார்களுக்குத் தப்பிவிடக் கூடியவை என்பதால் அவற்றின் மூலமான தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.