இபிஎஸ் உள்ளிட்ட எம்எல்.ஏ-க்கள் கைது.

சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.