இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்து வரும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. அத்துடன் கங்குலி பெங்கால் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்து விட்டார்.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயது ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்க இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வாகிறார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதியாக யார்? போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்தியா தரப்பில் இருந்து யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.