T20 உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ஓட்டங்களும் ,சூர்யகுமார் யாதவ் 50 ஓட்டங்களும் , கோலி 19 ஓட்டங்களும் எடுத்தனர். இதையடுத்து 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பின்ச் ஆகியோர் இறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ஓட்டங்கள் எடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 11 ஓட்டங்களும் , மேக்ஸ்வெல் 23 ஓட்டங்கள் , ஸ்டோய்னிஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் பின்ச் அரைசதம் அடித்தார். நிலைத்து நின்று ஆடிய அவர் 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்களே தேவைப்பட்டது.
இறுதி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களில் ஆட்டமிழந்த்னர். இதன் மூலம் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.