ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையின் படகு ஆறு கடற்படையினருடன் மாயம்.

ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட படகில்  இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர்.

அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்  என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேளை போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை காணாமல்போவதற்கு முன்னர் குறிப்பிட்ட கடற்படையினர் தாங்கள் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சோதனையிட முயல்வதாக கொழும்பிற்கு தெரிவித்தனர் என தகவல் கிடைத்துள்ளதாக ஜலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல்போன படகு கடற்படையின் புலனாய்வுபிரிவினருக்கு சொந்தமானது தென்பகுதி கடலில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்களிற்கு முன்னர் கடற்படையினர் காணாமல்போயுள்ளனர்.