குழந்தைகளுக்கான சளி மருந்து குறித்து சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Kumarathasan Karthigesu

இந்தியாவின் மைடன் மருந்து நிறுவனத்தினால் (Maiden Pharmaceuticals Limited) தயாரிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கான சளி மற்றும் காய்ச்சல் மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் தகவல் வெளியிடுகையில் அந்த நிறுவனத்தின் உற்பத்திகளான நான்கு மருந்து வகைகள் குறித்து நாடுகளை எச்சரிக்கை செய்துள்ளார்.

மைடன் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்திகளான Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup and Magrip N Cold Syrup ஆகிய நான்கு சளி, காய்ச்சல் மருந்துகள் குறித்தே உலகளாவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்காவின் கம்பியா (Gambia) நாட்டில் இந்த மருந்துகளில் ஒன்றின் பாவனையால் 66 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு உயிரிழந்தன என்பது தெரியவந்திருப்பதை அடுத்தே மைடன் நிறுவனத்தின் மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பியா சுகாதார அமைச்சு கடந்த ஜூலை நடுப்பகுதியில் ஐந்து மாதம் முதல் நான்கு வருடங்கள் வரையான வயதுகளையுடைய சுமார் 28 குழந்தைகளது மரணம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தியிருந்தது. அதன் முடிவுகள் இரண்டு விதமான சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன. அவற்றில் ஒன்று பரசிற்றமோல் பாணி மருந்து அடுத்தது ஈகோலி பக்ரீரியா( E. coli bacteria) தொற்று இரண்டுமே காரணங்களாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. ஆனால் – உலக சுகாதார அமைப்பு நடத்திய முதலாவது கட்ட ஆய்வில் நான்கு பாணி மருந்துகளிலும் (syrups) டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல்(diethylene glycol and ethylene glycol) அளவுக்கதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கிறார். நான்கு மருந்துகளையும் பாவனையில் இருந்து மீளப் பெறுமாறு நாடுகளை அவர் கேட்டிருக்கிறார். அவற்றின் மீது ஆய்வுகூடப் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்கான இந்தப் பாணி மருந்து வகைகள் ஆண்டு தோறும் 2.2 மில்லியன் போத்தல்கள் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் அவற்றில் கம்பியா நாட்டிலேயே இவ்வாறான பாதிப்புப் பற்றி முறையிடப்பட்டிருப்பதாகவும் மைடன் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.