இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும்: சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 57 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “We are near total breakdown” என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, நாட்டின் உணவுப் பணவீக்கம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், வருமான இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வை முன்வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், மருந்துப் பொருட்களின் விலையை 40வீதம் உயர்த்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன், ஓகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2 ஆயிரத்து 724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.2 மில்லியன் மக்கள் அல்லது 28வீத மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது