சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு: நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க அவர்கள் தயாராகவே இருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் பின்னடித்தார்கள் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து ராஜபக்சக்களின் ஆட்சியைக் கவிழ்க்கவே பாடுபட்டார்கள்.
அன்றும் சரி, இன்றும் சரி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் நலனில் அக்கறையின்றிச் செயற்படுகின்றனர். சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு. இதைத் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை, தெற்கிலுள்ள எதிர்க்கட்சியினரும் சுயலாப அரசியலைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றனர். சிங்கள மக்களின் நலன் தொடர்பில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அதுதான் பிரதமர் பதவியை ஏற்கவும், சர்வகட்சி அரசை நிறுவவும் அவர்கள் பின்னடித்தனர் என்றார்.