மாமன்னன் திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியானது.
இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீவிரமான அரசியல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு, நடிகர் கலையரசனை வைத்து, பிரபல OTT தளம் தயாரிக்கும் வெப் தொடரை இயக்கவிருக்கிறாராம் மாரி செல்வராஜ். இதில் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த டிஜிட்டல் தொடருக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘கர்ணன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், கோலிவுட்டின் முக்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குநராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். கலையரசனை பொறுத்தவரை கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.