ஐ.நா தீர்மானங்களை நிராகரிக்கும் உயர் நீதிமன்றம்
இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் தீர்மானங்கள் குறித்து அவதானம் செலுத்தப்போவது இல்லை என இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் தொடர்பில் நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த போதே உயர் நீதிமன்றம் இந்த விடயத்தை தெரிவித்ததாக, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள காணொளியில் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை நீதிமன்றம் தடுத்து வைத்துள்ளது. முழுமையான சட்டவிரோதமான செயலே இது. குற்றவியல் விசாரணைக்கு முரணாக, அதற்கு வெளியே. ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய அவர்களை தடுத்து வைத்துள்ளார்கள். முழு உலகும் அதனை கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனை முழுமையாக நிராகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்க காங்கிரஸ், செனட் சபை இதனை வன்மையாக கண்டித்துள்ளது. உயர்நீதிமன்றில் இதுத் தொடர்பில் விளக்கமளிக்கையில் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையை கணக்கில் எடுப்பதில்லை என உயர் நீதிமன்றம் தெரிவிக்கின்றது. இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் தீர்மானங்களை இலங்கை உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுக்கப்போவது இல்லை என இலங்கை உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா. இதுதான் நாட்டின் நிலைமை. ஏன் அவ்வாறு இடம்பெறுகின்றது. என்றார்.
இவ்வாறான விடயங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு பொது மக்களுக்கு நீதியை வழங்கும் மிக உயர்ந்த நிறுவனம் என்ற வகையில், நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான இறையாண்மையைப் பாதுகாக்கும் தீவிரப் பொறுப்பு உயர் நீதிமன்றத்திற்கு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.