‘போராட்டங்களை ஒடுக்கவும் ஊடகங்களை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் திட்டம்’
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ள இலங்கையின் தற்போதைய அரசாங்கம், மறுபுறத்தில் உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்கி மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் இலங்கை ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையை அறிமுகப்படுத்தக் கூடிய புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், புதிய ஒளி, ஒலிபரப்பு சட்டமானது ஊடக அடக்குமுறையை இலக்காகக் கொண்டது என்பதோடு, உயர் பாதுகாப்பு வலையங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலானது பொது மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கும் செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் பாரதூரமான வகையில் ஊடக அடக்குமுறைக்கு தயாராகி வருகின்றது. இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையை அறிமுகப்படுத்தக் கூடிய வகையில் புதிய ஒளி ஒலிபரப்பு சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்கள் சமூக ஊடகங்களையே கண்காணிக்க முற்படுகின்றனர். சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்வோரை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இவர்களது நோக்கம். இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை. ஒரு பக்கம் இந்த சட்டத்தை கொண்டு வருகின்றனர். மறுபுறுத்தில் அதிவிசேட பாதுகாப்பு வலையங்களை உருவாக்குகின்றனர். கொழும்பில் மிக முக்கியமாக போராட்டங்கள் இடம்பெறும் அனைத்து பிரதேசங்களும் இதற்குள் அடங்கும். அதேபோல் இந்த பிரதேசங்களில் கைது செய்யப்படுவோருக்கு உயர் நீதிமன்றத்தின் ஊடாகவே பிணைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சட்டத்தை யார் கொண்டு வந்தது. இந்த சட்டம் எங்கு காணப்படுகின்றது. அரசியல் அமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டே இது கொண்டுவரப்படுகின்றது. பொலிஸ் கட்டளைச் சட்டம் குறித்து பேசுகின்றனர். அது 100 வருடங்கள் பழமையானது. அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு அமைய அந்த சட்டம் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஒரு புறத்தில் உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்கி போராட்டங்களை அடக்குகின்ற அதேவேளை, மறு புறத்தில் ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர். இதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது.என்றார்.
பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவும், சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.