உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல : ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர்,’எந்த பிரச்சனையும் இல்லை. போராட்டங்கள் நடத்தலாம்.
கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றுமு; ஒரு கிராமத்தில்கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்றும தெரிவித்தார்.
அத்தோடு திடீர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன எனக் குறிப்பிட்ட அவர் உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை. காலங்காலமாக வரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் விடயங்கள் எனச் சுட்டிக் காட்டினார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கு தங்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை. அவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டால் அவ்வாறான இடங்களை பாதுகாக்க வேண்டும். முந்தைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.அதனால்தான் கொழும்பின் பெருநகரில் சில இடங்களை மட்டும் உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி உத்தரவின் மூலம் நியமித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.