ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, பிரித்தானியா புலம்பெயர் இலங்கையர்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், மாதத்திற்கு ஒரு முறை மாநாடுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் உயர்மட்ட முதலீட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழில் வல்லுனர்களின் பங்குபற்றுதலுடன் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதை இந்த சந்திப்புகள் நோக்கமாகக் கொண்டதாக இருக்கும்.

ஜனாதிபதி விக்ரமசிங்க லண்டனில் இருக்கும் போது அங்கு வாழும் புலம்பெயர் பிரதிநிதிகளை சந்தித்தார். பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பருத்தித்துறை தொடக்கம் பேதுருமுனைவரை தொழில் முயற்சியை கட்டியெழுப்புவதற்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் நிதியை வழங்க தயாராக இருப்பதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் பொறியியலாளர் விஸ்வநாதன் நிமலன் தெரிவித்துள்ளார்.

விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, தகவல் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் புலம்பெயர்ந்தோரின் நிதியை முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற புலம்பெயர் மக்களுடனான சந்திப்பின் பின்னர், எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் இலங்கைக்கு ஆதரவாக சந்திப்புகள் நடத்தப்படும் என்றும் நிமலன் தெரிவித்தார். தற்போது இலங்கைக்கு வெளியே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர்.