கல்கி குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் ஆவணப் படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கல்கி குழுமம் சார்பில் ”பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஒர் அனுபவ பயணம்” என்ற பெயரில் ஆவண படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதி வெளியிட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. கல்கி குழும தலைமை செயல் அலுவலர் லட்சுமி நடராஜன் வரவேற்று பேசினார். அவர் கூறும்போது, பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் இடங்களுக்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

கலாசார பெருமைகளை சொல்லும் வகையிலும் பொன்னியின் செல்வனை கொண்டாடும் வகையிலும் சோழர்கால வாழ்வியலை பறைசாற்றி இளைய தலைமுறையினர் மனதில் சரித்திர வேட்கையை ஊட்டும் வகையிலும் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளோம்” என்றார் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு ஆவணப்படத்தின் முதல் காணொளியை வெளியிட்டார்.

அவர் பேசும்போது, ”பொன்னியின் செல்வன் கதை நடந்துள்ள பாதையில் அனைவரையும் அழைத்து சென்று காணச் செய்யும் வகையில் இந்த ஆவணப்படம் தயாராகி உள்ளது. பொன்னியின் செல்வன் கதை நடந்துள்ள 9-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கதையின் உணர்வினை அனைவருக்கும் ஊட்டக்கூடிய வகையில் அற்புத பணியை செய்துள்ளனர் இந்த முயற்சி அபாரமானது.

தொடர்ச்சியாக 16 நாட்களுக்கு இந்த ஆவணப்படம் வர உள்ளது. இதை காண்பவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு நல்ல ஆவணமாக இது அமைந்துள்ளது. தமிழக அரசும் இத்தகையை முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சொல்வது நல்ல ஆலோசனை” என்றார்.