அட்லீ-ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய்.

அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அட்லி கடந்த புதன் கிழமை தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அட்லீ. பின்னர் விஜய், ஷாருக்கானுடன் தான் இருக்கும் பிறந்தநாள் கொண்டாட்ட படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அட்லீயின் பிறந்தநாளுக்கு விஜய்யும், ஷாருக்கானும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடனான படத்தைப் பகிர்ந்து, “என் பிறந்தநாளில் இன்னும் என்ன நான் கேட்க முடியும், என்னுடைய தூண்களுடன் சிறப்பான பிறந்தநாள். மை டியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணா என்னோட தளபதி நடிகர் விஜய்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய், ஷாருக்கான் மற்றும் அட்லீ ஆகியோரின் சமீபத்திய படம், ‘ஜவான்’ படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது குறித்த செய்திக்கு வலு சேர்த்துள்ளது. இதற்கிடையில், வெள்ளித்திரையில் விஜய் மற்றும் ஷாருக்கானை ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மறுபுறம், இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் பணிபுரிந்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபருக்குள் முடிவடையும் என்று தெரிகிறது. மேலும் படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விஜய் தனது 67-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைய உள்ளார், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.