வெகுஜன புதைகுழியை அடையாளம் மேலும் காலதாமதமாகும்.

 

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பெரிய மனித புதைகுழிகளில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளை பகுதிகளாக பிரித்து அனுப்பும் நடவடிக்கை மேலும் தாமதமாகியுள்ளது.

சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறிவியல் சோதனைகளுக்குத் தேவையான உத்தரவுகள் நீதிமன்றத்திலிருந்து நீதிமன்றத்திற்கு மாறியமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதனை அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள உடல் உறுப்புகள் மன்னாருக்கு கொண்டு வரும்போது சேதமடையலாம் எனவும், உடல் உறுப்புகளை மன்னாருக்கு கொண்டு வருமாறு உத்தரவிடும் இயலுமை தமக்கு இல்லை எனவும் நீதவான் அப்துல் சமட் ஹிப்துல்லா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாகங்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கு மன்னார் நீதவான் தீர்மானித்துள்ளதாக மனுதாரரான  மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 24ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் – சங்குப்பிட்டி ஏ32 வீதியில் நீர் குழாய் பதிக்க முதலாவது ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 82 உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொல்பொருள் திணைக்களம் இவை பழைய புதைகுழி என நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து ஒன்பது வருட காலமாக விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

2013 டிசம்பரில், திருக்கேதீஸ்ரம் கோவிலுக்கு அருகில் இரண்டு மாதங்கள் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, அப்போதைய தொல்பொருள் ஆணையாளர் ஜெனரல் செனரத் திஸாநாயக்க, இது வெகுஜன புதைகுழி அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்தார். 1953ற்கு முன் இருந்த புதைகுழி என அவர் கூறியதைக் கொண்டு இங்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களும் பெற்றோரும் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்ததையடுத்து, 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி மன்னார் நீதவான் அலெக்ஸ் ராஜா ஆசீர்வாதம் மீண்டும் தோண்டும் பணியைத் ஆரம்பிக்க உத்தரவிட்டார்.

அகழ்வாராய்ச்சி மற்றும் எலும்புகளை பரிசோதித்தல் தொடர்பில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் போதிய தலையீடு இல்லாத காரணத்தினால் விசாரணைகள் தடைப்பட்டன.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கும் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் தொடர் போராட்டத்தினால் ஒன்பது வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி விசாரணை இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

தற்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பெரிய வெகுஜன புதைகுழிகளில் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் காணப்படுகின்றது.