எரிபொருட்களின் விலையை 100 ரூபாயினால் குறைக்க முடியும்
இலங்கையில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் ஒரு லீற்றரின் விலையை 100 ரூபாயினால் குறைக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 135 டொலர்களாக காணப்பட்ட மசகு எண்ணெயின் விலை 85 டொலர்களாக குறைவடைந்துள்ள நிலையிலும், இலங்கையில் எரிபொருட்களின் விலை 10 ரூபாயினால் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளமைக்கு அமைய இலங்கையில் எரிபொருட்களின் விலையை 100 ரூபாய் வரையில் குறைக்க முடியுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பொருட்களின் விலை 83 வீதத்தால் அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்த கையோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. தற்போதையை அரசாங்கதே மிக வேகமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது. 2020 மே முதல் 2021 மே வரை எரிபொருள் விலை குறைவடைந்தது. 68.8 டொலர்களுக்கு காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 19 டொலர்களுக்கு குறைவடைந்தது. எனினும் அந்த சந்தர்பத்திலும் இலங்கையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. 56 ரூபாவிற்கு எண்ணெய் துறைமுகத்தை வந்தடைந்த போதிலும் அந்த நிவாரணம் பொது மக்களுக்கு கிடைக்கவில்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் மாத்திரமே அதிகரித்தது. அந்த கடன் சுமையை மக்கள் மேல் சுமத்தினர். அந்த கடனை அடைக்க மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 135 டொலர்களுக்கு காணப்பட்ட மசகு எண்ணெயின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 85 டொலர்களாக குறைவடைந்துள்ளது. எனினும் கடந்த இரண்டு மாதங்களில் 10 அல்லது 20 ரூபாயினால் மாத்திரமே எரிபொருளின் விலைககள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் குறைந்தது 100 ரூபாயினால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், குறைக்க முடியும். எனினும் அதுவும் இடம்பெறவில்லை. எரிபொருட்களின் விலை குறைக்கப்படுமாயின் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியுமென பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது. என்றார்
அரசாங்கத்தின் கீழ் உள்ள பெற்றோலியக் கூட்டுத்ததாபனம், மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களும் தரகு பணத்திலும், ஊழிலிலும் மூழ்கியுள்ள நிலையில், இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத வரையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவது சாத்தியமில்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.