ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகத்திற்கு திரும்புகிறது ரஷ்யா!ஐ. நா. பொதுச் சபை உரையில் அதிபர் மக்ரோன் குற்றச்சாட்டு.
Kumarathasan Karthigesu.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகம் ஒன்றை மீளத் தொடக்கியுள்ளது.
அதனை அனுமதிக்க முடியாது. இந்தப் போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும் அதற்கான விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
அதிபர் மக்ரோன் இவ்வாறு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தெரிவித்திருக்கிறார். உக்ரைனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை ஆக்கிரமித்த பிரதேசங்களில் நடத்த மொஸ்கோ தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்ரோன் தனது உரையில் அந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
உக்ரைனை இணைப்பதற்கு ரஷ்யா எடுக்கின்ற முடிவுகள் ஐரோப்பாவில் அது போல வேறு நாடுகள் இணைக்கப்படுவதற்கான போர்களைத் தோற்றுவிக்கலாம். நாளை ஆபிரிக்காவிலோ அல்லது ஆசியாவிலோ லத்தீன் அமெரிக்காவிலோ கூட நாடுகள் நாடுகளை இணைப்பதற்கான போர்கள் வெடிப்பதற்கு வழிவகுக்கலாம் – என்று மக்ரோன் எச்சரித்தார்.
இந்தப் போரில் நடுநிலைமை வகிக்கின்ற நாடுகள் வரலாற்றில் தவறிழைக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்வருமாறு அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
“இன்று மௌனமாக இருப்பவர்கள் ஒரு புதிய ஏகாதிபத்தியவாதத்துக்கும் சர்வதேச ஒழுங்கைச் சிதைக்கும் சமகால சுயநல மனப்பான்மைக்கும் உடந்தையாக இருக்கிறார்கள். அமைதி சாத்தியமே இல்லை என்ற உலகை
உருவாக்க உடந்தையாகின்றார்கள் “-என்று தனது உரையில் ரஷ்யாவின் போரைக் கண்டிக்காத நாடுகளைச் சாடினார் மக்ரோன்.
லண்டனில் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் பலர் அங்கிருந்து நேரடியாக நியோர்க்கில் நடைபெறுகின்ற பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருக்கின்றனர். அதிபர் மக்ரோனும் அங்கு சென்று பொதுச் சபையில் சற்று முன்னர் உரையாற்றியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஐரோப்பாவில் போர் வெடித்திருக்கின்ற பின்னணியில் நடைபெறுகின்ற முதலாவது ஐ. நா. பொதுச் சபைக் கூட்டம் இதுவாகும்.
அதனால் அங்கு நூற்றுக்கு மேற்பட்ட தலைவர்கள் ஆற்றவிருக்கின்ற உரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறவுள்ளன.
உக்ரைனில் தான் ஆக்கிரமித்த நான்கு பிராந்தியங்களில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி உக்ரைனை இணைக்கப்போவதாக மொஸ்கோ அறிவித்திருப்பது போரில் ஒரு மிக முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
மொஸ்கோவின் இந்த வாக்கெடுப்பை “போலித்தனமான கேலிக் கூத்து” என்று குறிப்பிட்டார் மக்ரோன். சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.