பிரித்தானியாவை தளமாக கொண்ட உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தழிழர் பேரவை ஆகியவற்றிற்கு  ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

 

பிரித்தானிய விஜயத்தின் போது புலம்பெயர் அமைப்புகளை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சந்தித்த  போதிலும் இந்த சந்திப்பிற்கு இரு பிரதான புலம்பெயர் தமிழர் அமைப்புகளிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்ட உலக தமிழர் பேரவை பிரித்தானிய தழிழர் பேரவை ஆகியவற்றிற்கு  ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு தனது அமைப்பிற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி ரவிக்குமார் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ்மக்களிற்கான அரசியல் தீர்வொன்று சாத்தியமாகும் வரை  இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரை சந்திக்கும் நோக்கம் தனது அமைப்பிற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு தடவையும் இது இடம்பெறுகின்றது நாங்கள் சந்திப்பிற்கான அழைப்புகளை நிராகரித்திருக்கின்றோம்,அர்த்தபூர்வமான அரசியல் தீர்வு காணப்படும் வரை இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எவரையும் நாங்கள் சந்திக்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான பொறிமுறையை சர்வதேச சமூகம் உருவாக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கான  முயற்சிகளில் அமெரிக்கா இந்தியாவின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கனடாவும் ஈடுபடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

உள்நாட்டு மோதல் மற்றும் வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் சமத்துவமான பேண்தகு அமைதியை உறுதி செய்வதற்காகவும்  பிராந்தியத்தில் புவிசார் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்தி அதனை பேணுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை சர்வதேச மத்தியஸ்த்தர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் நிகழ்விற்கு தங்களிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு எந்த அழைப்பும் கிடைக்கவில்லை,அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களிற்கு தீர்வொன்றை முன்வைத்து அவர்களின் நம்பிக்கையை பெறும்வரை அவரை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.