ரியூனியன் தீவுக்கு இலங்கை அகதிகள் 46 பேர் படகில் வருகை.
Kumarathasan Karthigesu
இலங்கையில் இருந்து 46 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றொரு படகு பிரான்ஸின் ரியூனியன் தீவை வந்தடைந்துள்ளது. ஆறு சிறுவர்கள், இரண்டு பெண்கள் அடங்கிய இக் குழுவினரை பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ஒன்று சனிக்கிழமை காலை மீட்டுக் கரைசேர்த்துள்ளது.
படகு இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்து புறப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. 46 பேரும் சுமார் 12 அடி நீளமான அந்தப் படகில் 4ஆயிரத்துக்கும் அதிக கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் மிகவும் களைப்படைந்து காணப்பட்டனர் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று இந்தப் படகு இந்து சமுத்திரத்தின் மற்றொரு தீவாகிய மொரீசியஸ் அருகே அந்நாட்டின் கரையோரக் காவல் படையால் முதலில் வழிமறிக்கப்பட்டது. படகில் இருந்தோர் தாங்கள் ரியூனியன் தீவில் புகலிடம் கோரவுள்ள தகவலைத் தெரிவித்ததை அடுத்து மொரீசியஸ் படையினர் படகை விடுவித்தனர்.
அகதிகள் படகு வருகின்ற தகவல் ரியூனியன் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலீஸாரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் அகதிகளை அங்கு வரவேற்றுப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மருத்துவம் மற்றும் சுங்கப் பரிசோதனையின் பின்னர் அவர்கள் அனைவரும் தீவில் உள்ள விடுதி ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
புகலிடக் கோரிக்கை தொடர்பாக சட்டவாளர்கள் அவர்களைச் சென்று சந்தித்துள்ளனர்.அகதிகள் மற்றும் நாடற்றவர்களைப் பாதுகாப்பதற்கான பிரான்ஸின் அலுவலகம் (French Office for the Protection of Refugees and Stateless Persons OFPRA) அவர்களது விண்ணப்பங்களை விரைவான நடைமுறையில் பரிசீலித்து வதிவிட உரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும்.
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய ரியூனியன் தீவு நோக்கி இலங்கை அகதிகள் வருவது சமீப காலமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது. முன்னர் 2018-2019 ஆண்டு காலப் பகுதியில் பல தடவைகளில் சுமார் 300 பேர் படகுகளில் ரியூனியன் தீவின் துறைமுகங்களை வந்தடைந்திருந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் மீண்டும் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
கொரோனா பெருந் தொற்றுக் காரணமாக இடையில் தடைப்பட்டிருந்த அகதிகள் வருகை இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்று ரியூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.