அஸர்பைஜானில் எல்லை கடக்க முயன்ற நான்கு இலங்கையர் கைது!
Kumarathasan Karthigesu
சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைய முயன்ற மேலும் நான்கு இலங்கையர்கள் அஸர்பைஜான் நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஈரானின் எல்லை ஓரமாக அமைந்துள்ள அஸர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தின் (Beylagan District) பிரிஞ்சி ஷாசெவன் (Birinji Shahsevan) கிராமத்திற்கு அருகே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.
கட்டார் தலைநகர் டோகா மற்றும் டுபாய் போன்ற இடங்களில் இருந்து சுற்றுலா வீஸாவில் அஸர்பைஜான் வந்த இவர்கள் கடந்த வியாழனன்று இரவு அங்கிருந்து ஈரானுக்குள் நுழைய முயன்ற சமயத்திலேயே பிடிபட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ட்ரென்ட் நியூஸ் ஏஜென்சி தெரிவித்தது.
இலங்கைப் பிரஜைகள் இதேபோன்று முன்னரும் ஈரானுக்குள் நுழைந்த சமயம் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் கடந்த ஓகஸ்ட்டில் பத்துப் பேரும் அதற்கு முன்னர் பெண் உட்பட ஐந்து இலங்கையர்களும் பிடிபட்டிருந்தனர்.
அஸர்பைஜான் வழியாக ஈரானுக்கும் அங்கிருந்து பின்னர் துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கும் ஆட்களைக் கடத்துகின்ற ஈரானிய பயண முகர்களே இலங்கையர்களை இவ்வாறு சட்டவிரோதமாக அழைத்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த ஈரானிய முகவர்களைக் கண்டு பிடிக்க அஸர்பைஜான் எல்லைக் காவல் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அஸர்பைஜானுக்கும் அண்டை நாடான ஆர்மீனியாவுக்கும் இடையே எல்லைக் கிராமம் ஒன்று தொடர்பாகத் தகராறு உள்ளது. அதனால் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ளன.