புகலிடம் தொடர்பான புதிய சட்டமூலம் ஜனவரியில்! மக்ரோன் அறிவிப்பு.

Kumarathasan Karthigesu

வெளிநாட்டு அகதிகளுக்கு கிராமங்களில் குடியிருப்பு.

வீஸா இன்றி நீண்ட காலம் தங்கும் நிலை மாற்றப்படும்.

பிரான்ஸ் அதன் குடியேற்றம், புகலிடம் தொடர்பான புதிய கொள்கைகளை உள்ளடக்கிய சட்ட மூலத்தை அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் தஞ்சம் மற்றும் வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பான தற்போதைய கொள்கை “அபத்தமானது”, “பயனற்றது” “மனிதாபிமானமற்றது”. நாட்டுக்குள் பிரவேசிக்கின்ற வெளிநாட்டுக் குடியேறிகளான ஆண்களையும் பெண்களையும் அது வசதிகளற்ற வறுமை நிலைக்குள் தள்ளுகின்றது – என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அகதிகளை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் காலத்தை இழுத்தடிக்காமல் வீஸா வழங்கும் நடைமுறைகள் துரிதப்படுத்தப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களின் சூழமைவுகளில் வெளிநாட்டவர்கள் வீஸா முடிவுகள் தெரியாது மிகவும் வசதிகள் ஏதும் அற்ற வறுமை நிலைக்குள் நீண்ட காலம் வாழ விடப்படுகின்ற தற்போதைய நிலைவரத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

எலிஸே மாளிகையில் கடந்த வியாழனன்று பொலீஸ் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திலேயே மக்ரோன் புதிய குடியேற்றச் சட்டமூலம் தொடர்பான இந்தத் தகவல்களை அறிவித்துள்ளார்

ஏற்கனவே சனத்தொகை அடர்த்தி கூடிய புற நகரங்களில் மேலும் வெளிநாட்டுக் குடியேறிகளைக் குடியமர்த்துவதனால் அங்கு அவர்கள் சமூக, பொருளாதார ரீதியில் ஒழுங்கற்ற சூழ்நிலைக்குள் விடப்படுகின்றனர். இதனால் நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடிகளைக் குறிப்பிட்டிருக்கின்ற மக்ரோன், புதிய கொள்கை வெளிநட்டவர்களைக் கிராமங்களுக்கு நகர்த்துவதை வரவேற்கும் என்பதையும் கோடி காட்டியுள்ளார்.

நாட்டின் கிராமங்கள் சனத் தொகையை இழந்து வருகின்றன. அங்கு பாடசாலைகள், கல்லூரிகளில் வகுப்பறைகள் மாணவர்கள் இன்றி மூடப்படுகின்றன. எனவே வெளிநாட்டவர்களை சீராக அந்த எல்லைகளுக்குள் வரவேற்று அங்கு அவர்களுக்குச் சமூக வீட்டு வசதிகளை வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமான குடியேறிகள், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீஸா நடைமுறைகளையும் பிரெஞ்சு மொழிக் கற்கை, தொழில் பயிற்சி போன்றவற்றையும் ஒழுங்கான முறையில் விரைவு படுத்துவது  புதிய கொள்கையில் அடங்கும். அதேசமயம் ஒழுங்கில்லாத அகதிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சட்டம் ஒழுங்கை மீறுவோர் போன்றவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு – சீர்திருத்தப்பட்டு – விரைவுபடுத்தப்படும் என்பதை மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸில் ஏனைய அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அகதிகள் குடியேறிகள் அதிகமாக புற நகரங்களில் வசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பாரிஸ் உட்பட முக்கிய நகரப்புறங்களில் குடியேறிகளது சனத்தொகை அடர்த்தி அதிகரித்து வருவது உள்நாட்டில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. தீவிர வலது சாரிகள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.