தமிழ் மக்களுடன் இறுதி தீர்வு ஏற்படும்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை.
அடுத்த சில மாதங்களில் வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து தனக்கு நம்பிக்கையிருப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டது என்றும்; அந்த யுத்தத்தில் வெற்றிக் கண்டிருக்கும் நிலையில் தற்போது தாம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவர முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என தான் நம்புவதாகவும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தான் தற்போது பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கு றிப்பிட்டார். தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம், முன்னர் எதிர்கொண்ட பயங்கரவாதத்தை போன்றதல்ல. நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர்கொள்ளமாட்டோம் என நம்புகின்றேன்.
என்றாலும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாம் தரப்பினரைத் தாக்குவதற்காக பயங்கரவாதிகள் இலங்கையை பயன்படுத்தக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.