தமிழ்ப் பெண்கள் மிகவும் மோசமாக சோதிக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் பேசப்பட்டர்கள்: சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.
தமிழ் அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக வடக்கில் இருந்து கொழும்புக்கு வந்த பெண்களை இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கேலிசெய்யப்பட்டும், இனவாதமாகவும், வன்முறையாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார்.
செப்டெம்பர் 12ஆம் திகதி தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட வடக்கில் இருந்து அவர்களது குடும்ப உறவினர்கள் கொழும்பு வந்திருந்தனர்.
இந்த பெண்களுக்கு எதிராக சிறையில் நிகழ்ந்த துஷ்பிரயோகம் குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கமும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சிறை அதிகாரிகளுக்கு சட்டம் மட்டுமின்றி, சீருடை, கையில் ஆயுதம் என்பதை தாண்டி ஒழுக்கம், மனித உறவுகள், மனித கண்ணியம் போன்றவற்றிலும் பயிற்சி அளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.