இலங்கை மீது ஐ.நா. அடுக்கடுக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை-

இலங்கை மீது ஐ.நா. அடுக்கடுக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இதைச் சம்பந்தனும், அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது தீர்மானங்கள் அடுக்கடுக்காக நிறைவேற்றப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என்றுமு;, கடந்த நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கை மேலோங்கி இருந்தமையால் இலங்கை மீதான அன்றைய ஐ.நா. தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது மாபெரும் தவறு என்றுமு; அவர் தெரிவித்தார்.

எனவே, நாட்டைத் துண்டாக்க முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எந்தக் கருத்துக்களுக்கும் தற்போதைய அரசு செவிசாய்யக்கூடாது. இலங்கை மீது ஐ.நா. அடுக்கடுக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இதைச் சம்பந்தனும், அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்’ – என்றார்.