இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

2-ம் எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது.

அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய பேழைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் விமானம் மூலம் இலங்கிலாந்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய பேழை வைக்கப்படுகிறது.

பேழையின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன. உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.