வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு வந்து தொழில் புரிவதற்கு “கிறீன் கார்ட்”!
Kumarathasan Karthigesu
சகல துறைகளிலும் காணப்படுகின்ற பெரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கதவைத் திறக்கிறது ஜேர்மனி. இதற்காகப் புதிய “கிறீன் கார்ட்” (green card) நடைமுறை ஒன்றை அந்த நாட்டின் தொழில் அமைச்சு இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
ஜரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் அல்லாத தகைமை வாய்ந்த பிற நாடுகளின் தொழிலாளர்களை நாட்டுக்குள் வரவழைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜேர்மனிய மொழியில் “Chancenkarte” எனப்படுகின்ற இந்தக் “கிறீன் கார்ட்” அதன் ஜேர்மன் மொழி அர்த்தத்தில் “வாய்ப்பு” அல்லது “சந்தர்ப்பம்” என்ற கருத்தைக் கொண்டுள்ளது.
இலகுவான நான்கு தகைமைகளைக் கொண்டவர்கள் எந்தத் தொழில் வாய்ப்பும் இல்லாவிடினும் விண்ணப்பித்து வீஸா பெற்று நாட்டுக்குள் வந்து பின்னர் பொருத்தமான தொழிலைத் தேடிக் கொள்வதற்குக் கிறீன் கார்ட் உதவும் என்று அதனை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்திய ஜேர்மனியின் தொழில் அமைச்சர் ஹூபர்டஸ் ஹெய்ல் (Hubertus Heil) தெரிவித்திருக்கிறார்.
விண்ணப்பிக்கத் தகைமையுள்ள தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் :
1.ஒரு பல்கலைக்கழகப் பட்டம் (degree) அல்லது தொழில்முறைத் தகுதி(professional qualification)
2.குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொழில்முறை அனுபவம்.
3.மொழித் திறன் (Language skill) அல்லது ஜெர்மனியில் முந்தைய வதிவிடம்.
அதிக எண்ணிக்கையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்றத் திட்டம் (points-based immigration system) ஒன்றை ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சிக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கிறீன் கார்ட் நடைமுறையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஜரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் தொழில் தேடி ஜேர்மனிக்குள் வருவதற்கு வாய்ப்பு வசதிகள் உள்ளன. ஆனால் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை ஒன்றை உறுதி செய்து விண்ணப்பித்தால் மட்டுமே அங்கு வருவதற்கான வீஸாவைப் பெற்றுக் கொள்ள முடியும். புதிதாக அறிமுகமாகின்ற கிறீன் கார்ட் (Chancenkarte) தொழில் தகுதி உள்ள ஒருவர் தொழில் வாய்ப்பு ஒன்றை உத்தரவாதப்படுத்தாமலேயே விண்ணப்பித்து ஜேர்மனிக்குள் நுழைவதை இலகுபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான விவரங்கள் வரும் மாதங்களிலேயே முழுமையாக வெளியாகும்.