நாணயம், முத்திரை பணத் தாள்களில் இனி ராஜாவின் படம்.தேசிய கீதத்திலும் ஒரு வரி மாற்றம்!

Kumarathasan Karthigesu

ராணி எலிசபெத்தின் மறைவை அடுத்து அவரது புதல்வர் சார்ள்ஸ் நாட்டின் மன்னராகியிருக்கிறார். அவர் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் (King Charles III) என அழைக்கப்படுவார். அதனால் இங்கிலாந்தின் முத்திரை, வங்கிப் பணத் தாள்கள் போன்றவற்றில் அரசியின் படம் படிப்படியாக நீக்கப்படும். மன்னர் சார்ள்ஸின் உருவம் அவற்றில் பொறிக்கப்படும். அதேபோன்று கடவுச் சீட்டு, பாதுகாப்புப் படையினரது சீருடை, தொப்பி என்பவற்றில் உள்ள அரசியைக் குறிக்கின்ற அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. அதற்குச் சில காலம் எடுக்கும்.

பணத் தாள்கள், நாணயக் குற்றிகளில் மகாராணியின் முகம் வலது பக்கமாக நோக்கிய படி காணப்படும். மன்னரின் முகம் இனிமேல் இடது புறமாக நோக்கிய படி தோன்றும். 17 ஆம் நூற்றாண்டுகளின் மரபின் படி இந்த மாற்றம் பின்பற்றப்படுகிறது. சட்ட விடயங்களில் மன்னரால் நியமிக்கப்பட்ட பாரிஸ்டர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் தங்கள் பட்டம் குயின்ஸ் கவுன்சிலிடம் (QC) இருந்து கிங்ஸ் கவுன்சிலுக்கு (KC) மாறுவதைக் காணலாம்.

அதேபோன்று தேசிய கீதத்திலும் சிறு திருத்தமாக “கடவுளே எங்கள் கருணையுள்ள மன்னரைக் காப்பாற்றுங்கள்” (‘God save our gracious King’) என்று ஒரு வரி மாற்றப்படுகிறது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட பொதுநலவாய நாடுகள் சிலவற்றின் நாணயங்களிலும் மன்னர் சார்ள்ஸின் உருவம் பொறிக்கப்படும். ஆஸ்திரேலிய நாணயங்களில் ஏற்கனவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.