இந்திய-பாகிஸ்தான் குடியேறிகள் 38 பேர் வான் ஒன்றில் மீட்பு! இத்தாலி வழியே பாரிஸ் வரும் போது சிக்கினர்!! .
Kumarathasan Karthigesu
வாகனம் ஒன்றில் ஆவணங்கள் ஏதுமின்றிச் சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட 38 பேரைப் பொலீஸார் வழிமறித்து மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய-பாகிஸ்தான் பின்னணி கொண்ட குடியேறிகள் எனத் தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் தென்கிழக்கே அமைந்துள்ள இசேர் (Isère) மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை இவர்கள் பயணித்த பொருள்களை ஏற்றப் பயன்படுத்தும் வெள்ளை நிற ரெனோல்ட் மாஸ்ரர் (Renault Master) வானை ஜெந்தாம் பொலீஸார் வழிமறித்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அனைவரும் சிக்கினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏ43 (autoroute A43) நெடுஞ்சாலையில் பொலீஸார் வாகனத்தை வழிமறித்து நிறுத்தியதும் அதன் சாரதி வாகனத்தில் இருந்து இறங்கித் தப்பியோடிவிட்டார்.
பொலீஸார் வாகனத்தைத் திறந்து பார்த்தபோது மிகச் சிறிய உட்புறத்தில் யுவதி ஒருவர் உட்பட 38 பேர் ஒருவரோடு ஒருவர் மிகவும் ஒட்டி நெருக்கமாக-அரக்க முடியாதவாறு – நின்றபடி பயணம் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவு தண்ணீர் இன்றிச் சோர்ந்த நிலையில் காணப்பட்ட அனைவரையும் வாகனத்தில் இருந்து வெளியேற்றிய பொலீஸார்
அவர்களுக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினரது உதவியுடன் பிஸ்கட் மற்றும் குடிதண்ணீர் வழங்கினர். பின்னர் அனைவரும் தரிப்பிடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தாலியின் ரியூரின்(Turin) நகரில் இருந்து பயணித்த அவர்களிடம் பாரிஸ் அழைத்துச் செல்வதற்கான கட்டணமாக 150 முதல் 300 ஈரோக்கள் வரை அறவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆட்கடத்தல் தொடர்பாக இசேர்(Isere) பொலீஸ் பிரிவினர் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றி வந்த அந்த வாகனத்தின் சாரதி தொடர்பான விவரங்களைச் சேகரித்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் தகவலின் படி 38 குடியேறிகளும் பிரான்ஸில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதற்கு அல்லது நாட்டை விட்டுத் தாங்களாகவே வெளியேறிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.