நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள்.

இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளது.காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிங்கள நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் அரசாங்கத்திற்கு கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களை ஏன் பிடிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டமை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் நடிகை தமிதா அபேரத்னவை தடுத்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாட்டில் இவ்வாறான அடக்குமுறைகள் தொடரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு முன் வந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய சட்டங்களின்படி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு இணங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். இதையடுத்து, நாமல் ராஜபக்ஷவுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்இ பொதுமக்களின் பிரதிநிதித்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தாலோ அல்லது நாமல் ராஜபக்ஷவோ தீர்மானிக்க முடியாது எனவும் அலரி மாளிகையிலேயே வன்முறை ஆரம்பித்தது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.