அடிமைத் தனத்தின் சின்னமாக இருந்த ராஜபாதை இப்போது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது-பிரதமர் மோடி

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் முக்கோண வடிவிலான பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதை ‘கடமை பாதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ‘கடமை பாதை’ திறப்பு விழாவிற்கு முன்னதாக, பிரதமர் மோடி சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்புக்கு சென்ட்ரல் விஸ்டாவின் மறுவடிவமைப்பு திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் அழைப்பதாக பிரதமர் மோடி தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பல்லாயிரக்கணக்கான பரப்பில் பசுமைப் புல்வெளி உருவாக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 28 அடி உயரமுள்ள இந்த சிலை நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள அதே இடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை மோனோலித்திக் எனப்படும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பேசிய பிரதமர் மோடி, டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம் நாட்டிற்கு புதிய சக்தியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. அடிமைத் தனத்தின் சின்னமாக இருந்த ராஜபாதை இப்போது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தின் சின்னமாக இருந்த, முந்தைய ராஜபாதை கடமை பாதையாக மாறும் இந்த நடவடிக்கையானது பொது உடைமை மற்றும் அதிகாரமளிப்புக்கு எடுத்துக்காட்டு. சுபாஷ் சந்திரபோஸ் காட்டிய வழியை இந்தியா பின்பற்றியிருந்தால், நாடு புதிய உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவற்றை மறந்துவிட்டோம். இந்தியா கேட்டில் உள்ள நேதாஜியின் சிலை இப்போது நமக்கு உத்வேகம் அளித்து வழிகாட்டும். கடந்த 8 ஆண்டுகளில் நேதாஜியின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பல முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறினார்.