தமிழ்நாட்டில் புதுமைப் பெண் திட்டம்:முதலமைச்சர் ஸ்டாலினிற்கு இறையன்பு புகழாரம்

உலகில் எந்த மூலையில் சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின் என இறையன்பு தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு பேசுகையில், உலகில் எந்த மூலையில் சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் கல்வித்துறை உருமாற்றம் பெற உள்ளது. 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகள் என்பது ஓரு தொடக்கம் தான். இன்னும் பல மாற்றங்கள் வர உள்ளன என தெரிவித்துள்ளார்.