அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : ஓ.பன்னீர்செல்வம்
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஜுலை 11ம் தேதி நடைபெற்று அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பொதுச் செயலாளர் பொறுப்பை ரத்து செய்து கட்சியை வழிநடத்திட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தோல்விக்கு வலிமையான தலைமை இல்லாதாதால் தோல்வியை சந்தித்ததாகவும், மீண்டும் ஒற்றைத் தலைமை பொறுப்பு கொண்டுவரப் பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், 2022 ஜுன் மாதம் 14 தேதியன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்னையை முன்வைத்தனர்.
மேலும், கடந்த ஜூன் 23 அன்று நடந்த பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இரட்டைத் தலைமையை ரத்து மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவது தொடர்பான விவரங்கள் இதில் இடம்பெற வில்லை.
இதனையடுத்து, கடந்த ஜுலை 11 அன்று நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.