புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம்.

பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை முடக்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ECRஇல் உள்ள ஒரு பங்களாவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேம குமார் என்கிற குணசேகரனுக்கு சொந்தமான இரண்டு விவசாய நிலங்களும் முடக்கப்பட்டதுடன், அவரது மகன் திலீப் என்கிற திலீப்பும் இதில் இணைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கடந்த 1999-இல் கொலை செய்ய முயன்ற வழக்கில் குணசேகரனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையிர், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இருவரும் தப்பி வந்து மாளிகை, விவசாய நிலங்கள் வாங்கி அங்கு குடியேறியதும் தெரியவந்தது. இந்திய க்யூ பிரிவு பொலிஸார் இது தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

குணசேகரன், தனது மகனுடன் சோ்ந்து போலி அடையாள அட்டைகள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், ஓட்டுநா் உரிமம், பான் காா்டு ஆகியவை தயாரித்திருப்பதும் தெரியவந்தது.

குணசேகரனுக்கு சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், கடந்த 2011-இல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும், விடுதலையானதும் குணசேகரன் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு தலைமறைவாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, குணசேகரன் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க க்யூ பிரிவு பொலிஸார் அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்தனா். அதன் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை குணசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் குணசேகரனுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

தற்போது குணசேகரன், அவரது மகன் திலீப் ஆகியோா் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.