ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி.

6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மோதின.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய மதீஷ பத்திரணவை பிரதியிட்ட அசித பெர்ணாண்டோ இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

பங்களாதேஷ் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய மொஹமட் நைம், அனமுல் ஹக், மொஹமட் சைபுடீனை மெஹிடி ஹஸன் மிராஸ், சபீர் ரஹ்மான், எபொடொட் ஹொஸைன் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர். இதில், ஹொஸைன் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே அசித பெர்ணாண்டோவிடம் ரஹ்மானை இழந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய மிராஸையும் 38 (26) ஓட்டங்களுடன் வனிடு ஹஸரங்கவிடம் இழந்ததுடன், அடுத்த ஓவரிலேயே சாமிக கருணாரத்னவிடம் முஷ்பிக்கூர் ரஹீம் வீழ்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸனும் 24 (22) ஓட்டங்களுடன் மகேஷ் தீக்‌ஷனவிடம் வீழ்ந்தார்.

தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அஃபிஃப் ஹொஸைன் 39 (22) ஓட்டங்களுடன் டில்ஷான் மதுஷங்கவிடம் வீழ்ந்ததோடு, மகமதுல்லா 27 (22) ஓட்டங்களுடன் ஹஸரங்கவிடமும், அடுத்த ஓவரில் மஹெடி ஹஸன் கருணாரத்னவிடம் வீழ்ந்தனர்.

இந்நிலையில், மொஷாடெக் ஹொஸைனின் அதிரடியான ஆட்டமிழக்காத 24 (09), தஸ்கின் அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 11 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது.

பதிலுக்கு 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை வேகமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 20 (19) ஓட்டங்களுடன் பத்தும் நிஸங்கவை ஹொஸைனிடம் இழந்ததுடன், அதே ஓவரிலேயே சரித் அஸலங்கவையும் ஹொஸைனிடம் இழந்தது. பின்னர் குறித்த இடைவெளிகளில் தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்‌ஷவை ஹொஸைன், தஸ்கின் அஹமட்டிடம் இழந்தது.

வேகமாக ஓட்டங்களைச் சேர்ந்த குசல் மென்டிஸ், ஐந்து ஆட்டமிழப்பு சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதன் பின்னர் முஸ்தபிசூர் ரஹ்மானிடம் 60 (37) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹஸரங்கவும் உடனேயே அஹ்மட்டிடம் வீழ்ந்ததோடு, வேகமாக ஓட்டங்களைச் சேர்ந்த ஷானகவும் 45 (33) ஓட்டங்களுடன் மஹெடி ஹஸனிடம் வீழ்ந்தார்.

பின்னர் கருணாரத்ன 16 (10) ஓட்டங்களுடன் ரண் அவுட்டானபோதும், பெர்ணாண்டோவின் ஆட்டமிழக்காத 10 (03) ஓட்டங்களால் 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார்.