வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மனு பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பு.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தொடர்போராட்டம் 2000 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர்களால் கையெழுத்திடப்பட்ட மனு ஒன்று பிரித்தானிய பிரதமர் அலுவகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச நாளை நினைவு கூரும் வகையிலும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும், பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து, செவ்வாய்க்கிழமை (30 ஆகஸ்ட்) அன்று, லண்டன் ரவர்கார் சதுக்கத்தில் (Trafalgar Square) நடாத்திய மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மனு கையளிப்பு இடம்பெற்றுள்ளது.
தாயகத்தில் பலவிதமான அச்சுறுத்தல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும் தளராது துணிந்து நின்று, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி, தொடர்ந்து போராடிவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை பிரிந்தானியாவுக்கு அழைத்து, அவர்களே நேரில் இந்த மனுவை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அவர்கள் பயணத்தில் ஏற்பட்ட தடங்கலால், அவர்கள் சார்பில் இந்த மனுவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரித்தானியா வாழ் உறவுகள் இணைந்து சமர்ப்பித்துள்ளனர். லண்டனை தளமாக கொண்டு இயங்கும், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) இதனை வழிநடத்தியிருந்தது.
2009 ஆம் ஆண்டு இறுதியுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமலாக்கப்பட்ட மற்றும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி 2000 நாட்களைக் கடந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர்ச்சியாக பலவேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதுவரை அவர்களிற்கு உரிய நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட இம்மனுவில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தி உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும், தம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான சிங்கள் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களிற்குரிய நிலங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும், தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் உறவுகள் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தமிழ் மக்களிற்குரிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் மேலும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.